மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2
1. சிறந்து நின்ளற சிந்தை யோடு தேயம் நூறு வென் றிவள் மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே!
2. நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேய வாணர்கள் தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் மாறு கொண்டு கல்வி தேய வண்மை தீர்ந்த நாளினும் ஈறு நிற்கும் உண்மை யொன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே!
3. வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய் மெய்மை நூல்கள் தேயவும் சொல்லும் இவ் வனைத்தும் வேறு சூழ நன்மை யுந்தர வல்ல நூல்கெ டாது காப்பள் வாழி அன்னை வாழியே!
4. தேவ ருண்ணும் நன்ம ருந்து சேர்ந்த கும்பம் என்னவும் மேவு வார்க டற்க ணுள்ள வெள்ள நீரை ஒப்பவும் பாவ நெஞ்சி னோர் நிதம் பறித்தல் செய்வ ராயினும் ஓவி லாத செல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே!
5. இதந்த ரும்தொ ழில்கள் செய்து இரும்பு விக்கு நல்கினள் பதந்த ரற் குரிய வாய பன்ம தங்கள் நாட்டினள் விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு வேறொ ருண்மை தோற் றவே சுதந்தி ரத்தி லாசை இன்று தோற்றி னாள்மன் வாழ்கவே!
8. பாரத மாதா
தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே.
முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்?-எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவிநல் ஆரிய ராணியின் வில் 1
இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடை வில்?-எங்கள் மந்திரத் தெய்வதம் பாரத ராணி வயிரவி தன்னுடை வில். 2
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே-மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை. 3
சித்த மயமிவ் வுலகம் உறுதிநம் சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம் அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் ஆரிய ராணியின் சொல் 4
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் தட்டி விளை யாடி-நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை. 5